நெல்லையில் வாலிபர் அடித்துக்கொலை

நெல்லையில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் நரியூத்து கிராமத்தின் தெற்கே காட்டு பகுதி உள்ளது.

அந்த பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக்கறைகளுடன் பிணமாக கிடந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து மானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வாலிபர் உடலை ஆய்வு செய்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, இன்ஸ்பெக்டர் ராமர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

பலியானவரின் உடலில் ரத்தக்கறைகள் அதிகமாக இருந்தது. பின் தலையில் பலத்த காயம் இருந்தது. இதனால் அவரை சிலர் சேர்ந்து அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் அடைந்தனர்.

அப்பகுதியில் நண்பர்களுடன் வந்து மது குடித்த போது ஏதேனும் தகராறு ஏற்பட்டு சக நண்பர்கள் அடித்து கொன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தினர்.

அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர் குறித்து திடுக் தகவல்கள் கிடைத்தது.

அவர் தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்த அஜித் (வயது30) என்பது தெரிய வந்தது. அவரது சொந்த ஊர் கீழநத்தம்.

இவர் டவுன் கோடீஸ்வரன் நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இறைச்சி கடை வைத்திருந்தார். தற்போது அதனை விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இவர் அந்த பகுதியில் உள்ள தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் மீது வெடிகுண்டு வீசியவர்களுடன் தொடர்பு வைத்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் அவர் மானூர் காட்டு பகுதியில் பிணமாக கிடக்கிறார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரை 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் முன் விரோதம் காரணமாக நைசாக பேசி அழைத்து வந்து கொன்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com