

நெல்லை:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கி பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று விட்டு விட்டு மழை பெய்து வந்தது. புறநகர் பகுதிகளான அம்பை, சேரன்மகாதேவி, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மாநகர் பகுதிகளான பாளை, நெல்லையில் விட்டு விட்டு மழை பெய்தது.
நேற்று முன்தினம் அணை பகுதியில் கனமழை பெய்தது. நேற்றும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்தது. அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 20 மில்லி மீட்டரும், ராதாபுரத்தில் 19 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 11 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.
பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 100.80 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 97.83 அடியாகவும் உள்ளது. அணைக்கு 2,242.76 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
அணைகளில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1389.75 கன நீர் வெளியேற்றப்படுகிறது.மணிமுத்தாறு அருவி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த அணையில் 81.60 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 1,120 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை விட்டு விட்டு பெய்ததால் தீபாவளி விற்பனை சற்று பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், வாலிபர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளியையொட்டி தாமிரபரணி ஆற்றில் எண்ணை தேய்த்து குளிக்க மக்கள் கூட்டம் அலை மோதியது. முக்கூடல் தாமிர பரணி ஆற்றில் இளைஞர்கள் டைவ் அடித்து குளித்து மகிழ்ந்தனர்.
இந்த மழையால் வழுக்கோடை-தொண்டர் சன்னதி சாலை, காட்சி மண்டபம் சாலை ஆகியவை சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சுரண்டை, புளியங்குடி, கடையம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பரவலாக மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் புகுந்தது. சாலையோர பள்ளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
தென்காசி மாவட்டத்திலும் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ராமநதி அணை பகுதியில் 15 மில்லி மீட்டரும், சிவகிரியில் 11 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்று மதியம் சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இதன் காரணமாக மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் அதிகளவில் விழுந்தது.
ஆனாலும் தடை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மழை காரணமாக குற்றாலம் பகுதியில் ரம்மியமான சூழல் காணப்பட்டது.
அணைகளை பொறுத்தவரை 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் 68 அடியும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 65 அடியும் நீர் இருப்பு உள்ளது.
கருப்பாநதியில் 57.91 அடி நீர் இருப்பு உள்ளது. மிகச்சிறிய அணையான குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணையில் 96 அடி நீர் இருப்பு உள்ளது.அணையில் இருந்து பாசனத்திற்காக 30 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம்-20, ராதாபுரம்-19, அம்பை-13, சேர்வலாறு-11, பாளை-6, நெல்லை, மணிமுத்தாறு-3, ராமநதி-15, சிவகிரி-11, கருப்பாநதி-5, கடனா-4.