

மதுரை:
மதுரையில் இருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லைக்கு இரட்டை அகல ரெயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், கோவில்பட்டி-மணியாச்சி, மணியாச்சி-தூத்துக்குடி மற்றும் நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையேயான பணிகள் முடிந்து போக்குவரத்துக்கு தயாராக உள்ளது.
அதனை தொடர்ந்து, திருமங்கலம்-விருதுநகரை அடுத்த துலுக்கப்பட்டி இடையேயான 41 கி.மீ. தூரத்துக்கான அகலப்பாதை பணிகள் முடிந்துள்ளன. இந்த பாதையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.கே.ராய் நேற்று முதல் ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி, திருமங்கலம்-விருதுநகர் இடையேயான அகலப்பாதை பணிகளை நேற்று காலை டிராலி மூலம் ஆய்வு செய்தார். அப்போது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள தண்டவாளம், பெரிய பாலங்கள், சிறிய பாலங்கள், ரெயில்வே கேட்டுகள், ரெயில்பாதை வளைவுகள், உயர்அழுத்த மின் கம்பிவடப்பாதை ஆகியவற்றை பார்ைவயிட்டார்..
அதேபோல, திருமங்கலம், கள்ளிக்குடி ரெயில் நிலையங்களில் ரெயில்பாதை இணைப்புகள், ரெயில் இயக்க மேலாண்மை ஏற்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் நேற்று மதியம் திருமங்கலம்-விருதுநகர் இடையே புதிதாக போடப்பட்டுள்ள அகலப்பாதையில் 120 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்தார்.
இந்த ஆய்வின்போது, மதுரை கோட்ட மேலாளர் லெனின், ரெயில்வே கட்டுமானப்பிரிவு முதன்மை செயல் அதிகாரி ரவீந்திரபாபு, ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட அலுவலர் கமலாகர ரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதிவேகத்தி்ல் ரெயிலை இயக்கி நடந்த சோதனையின் போது, பாதுகாப்பு பணிகளை ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் அன்பரசு உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இன்று (சனிக்கிழமை) காலை விருதுநகர்-துலக்கப்பட்டி இடையே டிராலி மூலம் ஆய்வு செய்கிறார். மதியம் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை நடத்த உள்ளார்.