

மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது36). இவர் தென்னிந் திய பார்வர்டு பிளாக் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார்.
இவருக்கு தோட்டம் உள்ளது. இங்கு அவர் கோழி பண்ணை வைத்து நடத்தி வந்தார். தினமும் அவர் அந்த கோழி பண்ணைக்கு செல்வது வழக்கம். சில நேரம் இரவு அங்கேயே தங்கி விடுவார்.
நேற்று இரவு இவர் தோட்டத்துக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த முத்துக்குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா, இன்ஸ் பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.
முத்துக்குமரன் உடலை கைப்பற்றி மருத்துவ பரி சோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலையில் 7 அல்லது 8 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டு இருக்க லாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துக்குமரனின் மைத்துனருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தோட்டத்தில் வைத்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
அப்போது முத்துக்குமரன் மைத்துனரின் நண்பர்களிடம், இனிமேல் இங்கு வராதீர்கள் என கூறி கண்டித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரத்தில் அவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டார்ளா? அல்லது அரசியல் முன்பகை காரணமாக வேறு யாரும் இந்த கொலையில் ஈடுபட்டார்களா? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அவர்களை நாலாபுறமும் தேடி வருகிறார்கள்.
கொலையுண்ட முத்துக்குமரனுக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் மகன் பிறந்தது குறிப்பிடத்தக்கது. கணவன் உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
முத்துகுமரன் கொலை செய்யப்பட்ட சம்பம் மேலூர் அருகே பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.