சிதம்பரம் அருகே வாய்க்காலில் மிதந்த பச்சிளம் குழந்தை உடல்

பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சிளம் குழந்தை உடல்
பச்சிளம் குழந்தை உடல்
Published on

புவனகிரி:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியை அடுத்த பூதவராயன்பேட்டை பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு இன்று காலை பக்தர்கள் சென்றனர். அப்போது கோவிலின் பின்புறம் உள்ள சின்ன வாய்க்காலில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடிகூட அறுக்கப்படாத நிலையில் பிணமாக மிதந்தது.

இதை பார்த்து பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வாய்க்காலில் பிணமாக மிதந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை வாய்க்காலில் வீசி சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்தும், மேலும் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தற்போது பிறந்த குழந்தைகளின் தகவல்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com