

தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் வணிகர் சங்க தலைவராக இருப்பவர் அன்பு. இவரையும், செயலாளர் லாரன்சையும் நேற்றுமுன்தினம் சிலர், தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வணிகர் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் கடைவீதியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் ஓட்டல்கள், மளிகைக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும் வணிகர் சங்க நிர்வாகிகள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முயற்சி செய்தனர். இதை அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவு கைவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாரியம்மன்கோவில் கடைவீதியில் தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவி, மாநகர தலைவர் அப்துல்நசீர், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாரியம்மன்கோவில் வணிகர் சங்க நிர்வாகிகள் மீது கொடுக்கப்பட்டுள்ள பொய் புகாரை ரத்து செய்ய வேண்டும். அடிதடி மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். மாரியம்மன்கோவில் கடைவீதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். தொடர்ந்து நடைபெற்று வரும் வணிகர்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.