குன்னம் அருகே கோவிலுக்குள் தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை

குன்னம் அருகே குடும்பத்தகராறு காரணமாக கோவிலுக்குள் தூக்குப்போட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்த சுரேசின் உடலை படத்தில் காணலாம்.
தற்கொலை செய்த சுரேசின் உடலை படத்தில் காணலாம்.
Published on

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மருதையான்கோவில் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 3 மாதங்களாக கோவிலில் சுதை வேலை மற்றும் வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள அழகியமணவாளம் கிராமத்தை சேர்ந்த பூபதியின் மகன் சுரேஷ்(வயது 23) கடந்த 15 நாட்களாக நண்பர்களுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். சுரேஷ் பெயிண்டர் ஆவார். இவருக்கு ராகவி(21) என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ராகவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் வேலை முடிந்த பின்னர் இரவில் சுரேசின் நண்பர்கள் கோவில் வளாகத்தில் படுத்து தூங்கினர். இந்நிலையில் இரவில் ராகவி, சுரேசுடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், செல்போனை எடுத்துக் கொண்டு வர்ணம் பூசும் வேலை நடைபெறும் கோவில் வளாகத்தின் உள்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கிருந்த துணியால் மின்விசிறி கொக்கியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

பின்னர் நண்பர்கள், நள்ளிரவில் எழுந்து பார்த்தபோது சுரேஷ் இல்லாததை கண்டு திடுக்கிட்டு அவரை தேடினர். ஆனால் அவர் கிடைக்காததால் அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் அழைப்பு ஒலி கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது கருவறை பகுதியில் சுரேஷ் தூக்குப்போட்டு பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து குன்னம் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து சுரேசின் தாய் ரேவதி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குப்பதிவு செய்து, சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். கோவில் பகுதியில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com