குன்னூர் ஏல மையத்தில் ரூ.16¾ கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை

தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு, குன்னூரில் செயல்படும் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
தேயிலைத்தூள்
தேயிலைத்தூள்
Published on

குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் விளங்குகிறது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு தொழிற்சாலைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருமானம் ஈட்டுகின்றனர். தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு, குன்னூரில் செயல்படும் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது. அதன்படி விற்பனை எண் 34-க்கான ஏலம் கடந்த 26, 27-ந் தேதிகளில் நடந்தது. இந்த ஏலத்துக்கு 20 லட்சத்து 29 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. அதில் 15 லட்சத்து 53 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 4 லட்சத்து 76 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 18 லட்சத்து 1000 கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 90 சதவீத விற்பனை ஆகும். இதன் ரொக்க மதிப்பு ரூ.16 கோடியே 78 லட்சம். விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களிலும் கிலோவுக்கு ரூ.1 விலை உயர்வு இருந்தது.

சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.287, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.250 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.72 முதல் ரூ.77 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.198 வரை ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.71 முதல் ரூ.84 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.219 வரை விற்பனையானது. அடுத்த ஏலம்(விற்பனை எண்-35) வருகிற 2, 3-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 19 லட்சத்து 38 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com