

கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அரிய திடல் கணபதி நகரை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 37). இவரது மகன் பாலச்சந்திரன் (14). இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் விஜயகுமார், பாலசந்திரனை அழைத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு திருநாகேஸ்வரம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாக்கோட்டையை அடுத்த மாத்தி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் கழிவுநீர் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விஜயகுமார், பாலச்சந்திரன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தனர். டேங்கர் லாரியை ஓட்டி வந்த கும்பகோணம் காரைக்கால் ரோடு முல்லை நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(32) லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
விபத்து குறித்து தகவலறிந்த பட்டீஸ்வரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் பலியான விஜயகுமார் மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டேங்கர் லாரி டிரைவர் பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டேங்கர் லாரி மோதி தந்தை-மகன் இருவரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.