கோவை: நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரை கட்டி போட்டு கத்தியால் குத்திய மனைவி

கணவர் அடிக்கடி பெண்களிடம் பேசுவதால் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கட்டி போட்டு கத்தியால் குத்திய மனைவி, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

செட்டிப்பாளையம்:

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 28). இவரது மனைவி பிரியதர்சினி (25). இவர் பெரம்பலூரைச் சேர்ந்தவர்.

கோகுல்நாத்தும், பிரியதர்சினியும் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் அவர்கள் கோவை அருகே மலுமிச்சம்பட்டி அன்புநகருக்கு வந்து குடியேறினர்.

கோகுல்நாத் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மேலும் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு வங்கியில் கடன் வாங்க ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.

இதனால் கோகுல்நாத்தின் செல்போனை பெண்கள் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். வீட்டில் இருக்கும் சமயங்களிலும் கோகுல்நாத் செல்போனில் பேசுவதை தொடர்ந்த வண்ணம் இருந்தார்.

கோகுல்நாத் செல்போனில் பேசுவது பிரியதர்சினிக்கு பிடிக்கவில்லை. கணவரின் நடத்தையில் அவர் சந்தேகம் கொண்டார். மேலும் தன்னை காதலித்தது போல் வேறு எந்த பெண்ணையாவது அவர் காதலிக்கலாம் எனவும் சந்தேகம் கொண்டார்.

இதுதொடர்பாக கணவரிடம் பிரியதர்சினி விசாரித்தார். அதற்கு கோகுல்நாத், சுயஉதவிக்குழு பெண்கள் பேசுவதாக தெரிவித்தார். ஆனால் அதனை நம்பாமல் பிரியதர்சினி, கணவரிடம் தகராறு செய்தார். இதில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இருந்தாலும் கோகுல்நாத், செல்போனில் பேசுவதை விடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பிரியதர்சினி, சினிமா வில்லன் ஸ்டைலில் கணவரிடம் விசாரிக்க முடிவு செய்தார். அதற்கான நேரம் பார்த்து காத்திருந்த அவர் நேற்று தனது திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தார்.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவரிடம், எனக்கு நேரம் போகவில்லை. ஏதாவது புது மாதிரியான விளையாட்டு விளையாடலாம் என கூறினார். அதனை நம்பி விளையாடுவதற்கு தயாரான கோகுல்நாத்தை, சேரில் அமர வைத்து கயிற்றால் கட்டினார்.

அதன்பிறகு தான் கோகுல்நாத்துக்கே மனைவி தன்னை திட்டமிட்டு சேரில் கட்டி வைத்தது தெரியவந்தது. சேரில் இருந்த எழுந்திருக்க முடியாமல் அமர்ந்திருந்த கோகுல்நாத்திடம், நீ அடிக்கடி போனில் பேசும் பெண் யார், அவரை நீ காதலிக்கத் தானே செய்கிறாய் என்று தொடர் கேள்விகளை கேட்டு பிரியதர்சினி திணறடித்தார். உண்மையை சொல்லா விட்டால் உன்னை கத்தியால் குத்தி விடுவேன் எனவும் மிரட்டினார்.

மனைவி தன்னை மிரட்டுவதற்காக அப்படி சொல்கிறார் என நினைத்து சிரித்தபடியே அமர்ந்திருந்த கோகுல்நாத்தை திடீரென பிரியதர்சினி கத்தியால் குத்தினார். வயிறு, தொடை பகுதிகளில் கத்திக்குத்து பலமாக விழுந்தது. குடல் வெளியே சரியும் அளவுக்கு கத்திக்குத்து பலமாக விழுந்தது.

இதனால் வேதனை தாங்காமல் கோகுல்நாத் அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்ததும் பிரியதர்சினியும் அச்சம் அடைந்தார். உடனே தானும் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கணவன், மனைவியை அங்குள்ளவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com