சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி?

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் சிகாபுதீன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பது மர்மமாகவே உள்ளது.
சப் இன்ஸ்பெக்டர் வில்சன்
சப் இன்ஸ்பெக்டர் வில்சன்
Published on

சென்னை:

குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சன், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் தவுபீக், அப்துல்சமீம் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு கடலூர் காஜாமொய்தீன், மெகபூப் பாஷா, ஜாபர் அலி, இஜாஸ் பாஷா ஆகிய 4 பேரும் கைதானார்கள்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த 6 பயங்கரவாதிகளின் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் ஓராண்டுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் நேற்று சிகாபுதீன் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.

சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை இவர் வாங்கி கொடுத்திருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை செய்யப்பட்ட உடன் சென்னையில் இருந்து கத்தாருக்கு சிகாபுதீன் தப்பிச் சென்றுவிட்டார். இதன் பிறகு அவர் எங்கிருந்தார் என்பது தெரியாமலேயே இருந்தது. இந்தநிலையில்தான் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய சிகாபுதீன் துப்பாக்கி வாங்கி கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில்தான் கத்தாரில் இருந்து நேற்று சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிகாபுதீனை கைது செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கத்தாரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சிகாபுதீன் வந்து இறங்கியதும், குடியுரிமை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் அவரை தனி அறையில் வைத்து விசாரித்தனர்.

கொச்சி போலீசார் சிகாபுதீன் தொடர்பாக ஏற்கனவே விமான நிலையங்களுக்கு வேறொரு வழக்கில் நோட்டீஸ் அனுப்பி இருந்ததாக தெரிகிறது. அதன் அடிப்படையில் சிகாபுதீன் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

அதிகாலை 4.30 மணிக்கு சிகாபுதீன் விமான நிலையத்தில் சிக்கிய தகவல் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு அதன் பின்னரே தெரிய வந்தது.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை விரைந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாலை 4.30 மணியளவில்தான் தங்களது கட்டுப்பாட்டுக்குள் சிகாபுதீனை கொண்டு வந்தனர். அதுவரை சென்னை விமான நிலையத்திலேயே 12 மணிநேரமாக குடியுரிமை அதிகாரிகளின் பிடியில் சிகாபுதீன் இருந்தார்.

வில்சன் கொலை வழக்கில் சிகாபுதீன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பது மர்மமாகவே உள்ளது.

அதன் பின்னணி பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் நேற்று கைதான சிகாபுதீன் உடனடியாக திருவனந்தபுரத்திற்கு அழைத்து செல்லப்படவில்லை. சிகாபுதீனின் கூட்டாளிகள் சிலர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிகாபுதீனை அழைத்து கொண்டு பெங்களூர் விரைந்துள்ளனர். அங்கு தலைமறைவாக இருக்கும் கூட்டாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com