நாகர்கோவில் பகுதியில் கடைகளில் ஆடுகளை வெட்டினால் கடும் நடவடிக்கை - அதிகாரிகள் எச்சரிக்கை

நாகர்கோவில் பகுதியில் கடைகளில் ஆடுகளை வெட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி கடைகளில் நோய் வாய்ப்பட்ட ஆடுகள், ஏற்கனவே இறந்துபோன ஆடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நாகர்கோவில் மாநகராட்சி மாநகர் நல அதிகாரி கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் தலைமையிலான பணியாளர்கள் நேற்று காலை வடசேரி, வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம், கணேசபுரம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது வியாபாரிகளிடம், இனி இளங்கடையில் உள்ள ஆடு அறுக்கும் கூடத்தில் ஆடுகளை ஆய்வு செய்த பிறகே வெட்ட வேண்டும் என்றும், அதன் பிறகு வெட்டப்பட்ட ஆட்டு இறைச்சியை கடைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. அதையும் மீறி இறைச்சி கடைகளில் ஆடுகளை வெட்டினால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

முன்னதாக முக கவசம் அணியாத 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.200 வீதம் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் அபராதம் விதித்தார். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ஒரு கடைக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com