காலே டெஸ்டில் மேத்யூஸ், டிக்வெல்லா அபாரம் - முதல் இன்னிங்சில் இலங்கை 381 ரன்கள் எடுத்தது

மேத்யூஸ், டிக்வெல்லா, பெராரா ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் காலே டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்சில் 381 ரன்கள் எடுத்துள்ளது.
பொறுப்புடன் ஆடிய டிக்வெல்லா, தில்ருவான் ஜோடி
பொறுப்புடன் ஆடிய டிக்வெல்லா, தில்ருவான் ஜோடி
Published on

காலே:

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. லஹிரி திரிமானே, குசால் பேரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

குசால் பெரேரா 6 ரன்னில் வெளியேறினார். ஒஷாடா பெர்னாண்டோ டக் அவுட் ஆனார். திரிமானே 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தினேஷ் சண்டிமால் அரை சதமடித்து 52 ரன்னில் வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு மேத்யூஸ் உடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்தார்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மேத்யூஸ் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 107 ரன்களுடனும், டிக்வெல்லா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய மேத்யூஸ் 110 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த மெண்டிஸ் டக் அவுட்டானார். 

டிக்வெல்லா, அடுத்து இறங்கிய தில்ருவான் பெராரா ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92 ரன்னில் டிக்வெல்லா ஆட்டமிழந்தார். தில்ருவான் 67 ரன்கள் அடித்து வெளியேறினார்.

இறுதியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 139.3 ஓவரில் 381 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன்6 விக்கெட்டும், மார்க் வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் சிப்லி ரன் எதுவும் எடுக்காமலும், கிராலே 5 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய பேர்ஸ்டோ, ஜோ ரூட் நிதானமான ஆடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 24 ரன்னுடனும், ஜோ ரூட் 67 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com