

சமயபுரம்:
பெரம்பலூர் மாவட்டம் இரூர் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் முத்து (வயது 50). இவர் பெரம்பலூரில் சாலைபணியாளராக வேலை பார்த்துவந்தார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள சி.ஆர்.பாளையத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இவர், தனது மனைவி சித்ரா (40) மற்றும் இரு மகன்களை அழைத்துக்கொண்டு நேற்று வந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு முத்து மட்டும் அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் நேற்று மதியம் ஊருக்கு புறப்பட்டு சென்றார். சித்ரா தனது 2 மகன்களுடன் சி.ஆர்.பாளையத்தில் தங்கிவிட்டார்.
இந்நிலையில், சி.ஆர்.பாளையம் மெயின்ரோட்டில் முத்து சென்ற போது, அவரை வழி மறித்த மர்ம நபர்கள், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில் படுகாயமடைந்த முத்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முத்துவை வெட்டியது யார்? எதற்காக வெட்டினார்கள்? என்று உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.