

நெல்லை:
தென்காசி அருகே உள்ள இலத்தூரில் நடந்த ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது அந்த வழக்கில் சுரண்டை அருகே உள்ள ஊர்மேல் அழகியான் கிராமத்தை சேர்ந்த பால் தினகரன் (வயது37) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் நிஷாந்த், போலீஸ்காரர் சக்திவேல் (37) ஆகியோர் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் ஊர்மேல் அழகியான் கிராமத்திற்கு சென்றனர்.
அங்கு பால் தினகரன் வீட்டிற்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது பால் தினகரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தன்னை பிடித்த போலீஸ்காரர் சக்திவேலின் கை மற்றும் தலையில் வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் அலறித் துடித்தார். அப்போது கொள்ளையன் பால் தினகரன் தப்பி ஓடி விட்டான். உடனடியாக சப்- இன்ஸ்பெக்டர் நிஷாந்த் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
படுகாயம் அடைந்த சக்திவேலை உடனடியாக மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சாம்பவர் வடகரை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக பால் தினகரன் மீது சாம்பவர் வடகரை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். தப்பி ஓடிய பால்தினகரன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவரை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிரமாக பால் தினகரனை தேடி வருகிறார்கள்.