வியாபாரியை கத்திமுனையில் மிரட்டி ரூ.4 லட்சம் செல்போன் கொள்ளை

கேளம்பாக்கத்தில் செல்போன் கடையில் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்திமுனையில் வியாபாரியை மிரட்டி ரூ.4 லட்சம் செல்போன்களை பறித்து சென்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

திருப்போரூர்:

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் கேளம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே போலேராஜ் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வழக்கம் போல் கடையை மூடும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் போல் 4 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் நுழைந்தனர்.

அப்போது அவர்கள் செல்போன் வாங்குவது போல் விற்பனையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென உள்ளே இருந்தவாறு கடையின் கதவை மூடினர். பின்னர் அந்த கும்பல் பையில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை காட்டி செல்போன் கடை உரிமையாளர் போலேராஜ் உள்ளிட்ட 3 பேரையும் மிரட்ட தொடங்கினர்.

அதைத்தொடர்ந்து, அவர்களை கடையின் ஓரத்தில் அமரவைத்ததுடன், அவர்கள் கண்முன்னே ரூ.4 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 20 செல்போன்கள், கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் கத்திமுனையில் கடைக்காரர்களை மிரட்டி செல்போன் கொள்ளையடித்த சம்பவம் பதிவாகி இருந்தது தெரியவந்தது. கடை மூடும் நேரத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கத்திமுனையில் செல்போன்களை அள்ளிச்செல்லும் காட்சி சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தின் 50 மீட்டர் இடைவெளியில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதியில் பட்டாகத்தி முனையில் செல்போன் கடையில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேளம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவம் அதிக அளவில் அரங்கேறி வருவதால் பொதுமக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com