கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர் பலி

கோபி அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கடத்தூர்:

கோபி அருகே உள்ள நம்பியூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 15). இவர் நம்பியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கோபியை அடுத்த எலத்தூர் செட்டிபாளையம் கீழ்பவானி வாய்க்காலுக்கு தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் குளிக்க சென்றார். வாய்க்காலில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு தினேஷ்குமார் சென்றதாக தெரிகிறது. நீச்சல் தெரியாததால் அவர் வாய்க்காலில் மூழ்கியதுடன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் தீயணைப்பு வீரர்கள், கடத்தூர் போலீசார் விரைந்து சென்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தினேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அவரின் உடல் கிடைக்கவில்லை. இதற்கிடையே இருட்டிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கோபியை அடுத்த வெட்டையம்பாறை என்ற இடத்தில் தினேஷ்குமார் உடல் மிதந்தது. உடனே கடத்தூர் போலீசார் அங்கு சென்று தினேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com