

அயோத்தியாப்பட்டணம்:
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள கூட்டாத்துப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மகள் சரிதா (வயது 16). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் சரிதா மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர், உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் சரிதாவின் உடலை எரித்து விட்டனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் காரிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் காதல் விவகாரத்தில் மாணவியை அடித்து கொன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்ததால், சரிதாவின் தந்தை முனியப்பன் மீது காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.