சங்கரன்கோவிலில் 5 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடல்

நூல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 2-ந்தேதி வரை ஒரு வாரம் இந்த போராட்டத்தை நடத்துவோம்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விவசாயத்திற்கு அடுத்தப் படியாக பிரதான தொழிலாக இருப்பது விசைத்தறி. இந்த தொழிலை நம்பி வீடுகளில் தறி வைத்திருப்பவர்கள், விசைத்தறி கூடங்கள் வைத்திருப்பவர்கள் என சுமார் 5 ஆயிரம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கூடங்களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நூல் விலை அதிகரித்து வருவதால் விசைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வை கண்டித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கடந்த 22-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

ஆனாலும் நூல் விலை உயர்வில் எந்தவித மாற்றமும் இல்லை. தொடர்ந்து அடுத்த மாதமும் விலை உயர்ந்து கொண்டே போனால் நூல் கொள்முதலை நிறுத்தப் போவதாக விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் குழு, திருமுருகன் சிறு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை அறிவித்தது.

இதனை கண்டித்து இன்று முதல் ஒரு வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர். அதன்படி இன்று முதல் அவர்கள் அடையாள வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

இதுகுறித்து சங்கத்தினர் கூறுகையில், நூல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 2-ந்தேதி வரை ஒரு வாரம் இந்த போராட்டத்தை நடத்துவோம்.

மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றனர். இந்த ஒரு வார வேலை நிறுத்தம் காரணமாக சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com