

சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வெள்ளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேதகிரி (வயது 42). விவசாயியான இவருக்கு சித்ரா (38) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் மதுவுக்கு அடிமையான வேதகிரி தனக்கு சொந்தமான 12 ஏக்கர் சொத்தையும் விற்று மது குடித்ததுடன் ஊதாரியாக செலவு செய்து வந்தார். மேலும் மனைவி மற்றும் தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 1-ந் தேதி வழக்கம் போல குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்ட வேதகிரியை அவரது மனைவி சித்ரா மற்றும் தாய் ராஜேஷ்வரி (60) ஆகியோர் கழுத்தில் துண்டால் இறுக்கினர். இதில் மூச்சு திணறி அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் சித்ரா மற்றும் ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மனைவி சித்ரா போலீசாரிடம் கூறியதாவது:-
குடிப்பழக்கம் உடைய வேதகிரி தனது பெயரில் இருந்த 12 ஏக்கர் சொத்தையும் விற்று மது குடித்ததுடன் அடிக்கடி எங்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். எவ்வளவோ? சொல்லியும் அவர் திருந்தவில்லை. இதனால் கடும் அவதிப்பட்டு வந்தோம்.
கடந்த 1-ந் தேதியும் வழக்கம் போல தகராறில் ஈடுபட்ட அவர் பின்னர் படுத்து தூங்கினார். அப்போது அவரை கொல்ல திட்டமிட்டு துண்டால் கழுத்தை இறுக்கினோம். இதனால் மூச்சு திணறி இறந்தார். இதனை மறைக்க அதிகம் மது குடித்ததால் அவர் இறந்து விட்டதாக அக்கம்- பக்கத்தினரிடம் தெரிவித்து உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தோம். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு சித்ரா கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.