திருச்செந்தூர் அருகே ஓடும் காரில் திடீர் தீ 7 பேர் உயிர் தப்பினர்

திருச்செந்தூர் அருகே ஓடும் காரில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காரில் தீப்பிடித்து எரிந்ததை படத்தில் காணலாம்.
காரில் தீப்பிடித்து எரிந்ததை படத்தில் காணலாம்.
Published on

ஆறுமுகநேரி:

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகன் ராமகிருஷ்ணன். விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியைச் சேர்ந்த தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வாடகை காரில் புறப்பட்டு வந்தார். அந்த காரை அப்பகுதியைச் சேர்ந்த டிரைவர் சரவணன் ஓட்டினார்.

நேற்று அதிகாலை 5.45 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் போலீஸ் நிலையம் அருகில் சென்றபோது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து குபுகுபுவென்று புகை வந்தது.

இதனை பார்த்த டிரைவர் சரவணன் அதிர்ச்சி அடைந்து உடனே காரை நிறுத்தினார். தொடர்ந்து காரில் தூங்கி கொண்டிருந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேரையும் எழுப்பி, காரில் இருந்து இறங்குமாறு கூறினார். அவர்கள் அனைவரும் காரில் இருந்து இறங்கிய சில வினாடிகளில் காரில் தீப்பிடித்து மளமளவென்று எரிந்தது. சில நிமிடங்களில் கார் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். காரில் தீப்பிடித்து எரிவதற்கு முன்பாக டிரைவர் கவனித்து காரில் இருந்த அனைவரையும் கீழே இறங்க செய்ததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com