ஆண்டிப்பட்டி அருகே ஓடும் காரில் திடீர் தீ- 4 பேர் உயிர் தப்பினர்

ஆண்டிப்பட்டி அருகே ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் தீப்பிடித்து எரிவதை படத்தில் காணலாம்.
கார் தீப்பிடித்து எரிவதை படத்தில் காணலாம்.
Published on

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் லோகேஷ்ராஜ் (வயது25). இவர் தனது குடும்பத்தினர் 3 பேருடன் ஆண்டிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தார். காரை லோகேஷ்ராஜ் ஓட்டினார். ஆண்டிப்பட்டி அருகே குன்னூர் பகுதியில் வந்த போது காரின் முன்பகுதியில் என்ஜினில் இருந்து புகை வந்தது. இதையடுத்து காரை சாலையோரம் நிறுத்திவிட்டு லோகேஷ்ராஜும், அவருடன் வந்த 3 பேரும் கீழே இறங்கினர். அப்போது திடீரென என்ஜின் பகுதி தீப்பிடித்து மளமளவென எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் தேனி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் தீயணைப்புபடையினர் வருவதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. லோகேஷ்ராஜ் உள்பட 4 பேரும் காரில் இருந்து உடனடியாக கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் என்ஜினில் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com