

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் மரவள்ளிக்கிழங்குகளை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் வியாபாரிகள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.5 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.750 அதிகரித்து ரூ.6 ஆயிரத்து 250-க்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வடைந்துள்ளதால் அதனை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.