ஆத்தூர் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி ரூ. 6 லட்சம் பறிப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி ரூ.6 லட்சத்தை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் பேரூராட்சியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சூப்பர்வைசராக கொத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த மோகன் (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அவர் நேற்றிரவு 10 மணியளவில் டாஸ்மாக் கடையை மூடி விட்டு மதுபானங்கள் விற்பனையான பணம் ரூ 6 லட்சத்து 11 ஆயிரத்தை எடுத்து கொண்டு கொத்தம்பாடியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஏத்தாப்பூர் சாலையில் உள்ள கே.ஆர்.தோப்பு என்ற இடத்தில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அவர் மீது மோதினர். இதில் நிலை தடுமாறிய மோகன் கீழே விழுந்தார். இதையடுத்து மர்மநபர்கள் 2 பேரும் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த பணப்பையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து மோகன் கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற ஏத்தாப்பூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் காயம் அடைந்த மோகனை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com