நெல்லை மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல்

நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை நடந்த சோதனைகளில் மொத்தம் ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்து 268 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.

நேற்று நடந்த வாகன சோதனையில் ரொக்க பணம் ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 208 பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல 176 குத்துவிளக்குகளும், 590 பம்பரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு சென்றதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் இதுவரை நெல்லை மாவட்டத்தில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1950 என்ற சேவை எண்ணில் நேற்று தகவல் கேட்ட 45 பேருக்கு தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. மொத்தம் இந்த எண்ணிற்கு வந்த 557 புகார்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

நேற்று வரை நடந்த அதிரடி சோதனைகளில் 230 வேட்டிகள், 5 பைகளில் கவரிங் நகைகள், 7.7 கிலோ வெள்ளி நகைகள், ஒரு வாகனம், 70 மதுபாட்டில்கள், 2,900 கிலோ அரிசி, 40 கிலோ பருப்பு ஆகியவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று வரை நடந்த சோதனைகளில் மொத்தம் ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்து 268 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று மட்டும் 25 சுவர் விளம்பரங்கள், 279 போஸ்டர்கள் கிழித்து அகற்றப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 14 ஆயிரத்து 570 சுவர் விளம்பரங்கள் மற்றும் டிஜிட்டல் போர்டுகள், போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com