திருச்சி மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி - ஒருவர் கைது

திருச்சியில் மின்சார வாரியத்தில் உதவி செயற் பொறியாளர் பணிக்காக பணம் கொடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் ஏமாந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைது
கைது
Published on

திருச்சி:

திருச்சி சுந்தர் நகர் ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது50) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், புத்தூர் திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (45) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி மின் வாரியத்தில், உதவி செயற்பொறியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. அதற்கு பணம் கொடுத்தால் வாங்கிவிடலாம் என்று செந்தில்குமாரிடம், நாகராஜன் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து தனது உறவினருக்கு அந்த வேலையை வாங்கி கொடுக்கும்படி, செந்தில்குமார் கடந்த 2017 -ம் ஆண்டு ரூ.12 லட்சத்தை நாகராஜனிடம் கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்து வருடங்கள் கடந்த நிலையில், வேலை வாங்கி கொடுக்காததால், பணத்தை தந்துவிடுங்கள் என்று செந்தில்குமார் கேட்டுள்ளார். விரைவில் வேலை வாங்கித் தருகிறேன் என்று நாகராஜன் கூறியுள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செந்தில்குமார், திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் உதவி ஆணையர் சின்னசாமி, இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜனை தேடி, விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், நாகராஜன் ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்தது தெரியவந்ததை, தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று, நாகராஜனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com