திண்டிவனத்தில் ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

திண்டிவனத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள்.
கைது செய்யப்பட்ட நபர்கள்.
Published on

திண்டிவனம்:

திண்டிவனம் ஆர்.எஸ்.பிள்ளை வீதியில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் உத்தரவின்பேரில், சப்- இன்ஸ்பெக்டர்கள் தமிழ்மணி, ஆனந்தராசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை , மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்த போது, அந்த வீடு கரீம் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த வீட்டை அதே பகுதியை சேர்ந்த காதர் மகன் அகமதுல்லா(வயது 39) என்பவர் வாடகைக்கு எடுத்து, புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

மேலும் அவர் பொன்னி நகரை சேர்ந்த கண்ணன் மகன் ஜெயராமன் (52) என்பவரிடம் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி, திண்டிவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமப்புற கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. 

இதையடுத்து அகமதுல்லா, ஜெயராமன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com