தளியில் பிரபல ரவுடி ஓட, ஓட வெட்டிக்கொலை

தளியில் பிரபல ரவுடி ஓட, ஓட சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள குருபரப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் நரேஷ் (வயது 28). பிரபல ரவுடி. இவர் மீது கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

இவர் நேற்று இரவு சிக்கன் வாங்குவதற்காக மோட்டார்சைக்கிளில் தளி பகுதிக்கு வந்தார். அங்குள்ள உருது பள்ளி அருகில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு அவர் கடைக்கு சென்று சிக்கன் வாங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ரவுடி நரேசை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நரேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த நபர்கள் விடாமல் நரேசை ஓட, ஓட விரட்டி சென்று தலையில் சரமாரியாக வெட்டினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் நரேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இந்த கொலையை நேரில் பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் அங்கிருந்து ஓடினார்கள்.

நரேஷ் இறந்து விட்டதை உறுதி செய்த அந்த நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து சென்று விட்டனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) முரளி மற்றும் தளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்ட நரேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட நரேஷ் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருப்பினும் நரேஷ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தளியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com