

பட்டிவீரன்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஸ்டேட் வங்கி காலனி, திண்டுக்கல் சாலையோரத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரால் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை. பின்னர் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அடுத்த நாள் காலையில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக வங்கி பணியாளர்கள் அங்கு வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ஒருவர், தனது முகம் தெரியாதபடி மறைத்துக்கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.