கொரோனாவுக்கு டாக்டர் பலி- போலி மருந்து வாங்கி வந்த டாக்டர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கொரோனாவுக்கு பலியான திண்டிவனத்தை சேர்ந்த டாக்டருக்கு போலி மருந்து செலுத்தப்பட்டது தொடர்பாக மற்றொரு டாக்டர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ஜெயபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராமன், (வயது 43) டாக்டரான இவர் திண்டிவனத்தில் செஞ்சி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் மேலாண் இயக்குநராக இருந்தார்.

இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் மோசமடைந்தது. அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் கடந்த 14-ந் தேதி இறந்தார்.

வீட்டில் ராமன் சிகிச்சையில் இருந்த போது திண்டிவனம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் சுரேஷ் என்பவர் மூலம் ரெம்டெசிவிர் மருந்து பெற்று அவருக்கு செலுத்தப்பட்டது.

அந்த மருந்து போலியானது. அதனால் டாக்டர் ராமன் இறந்தார் என்று அவரது தம்பி பிரதீப் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியத்திடம் புகார் அளித்தார்.

அமைச்சரின் உத்தரவின் பேரில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் குழுவினர் திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில், கடந்த 2-ம் தேதி புதுச்சேரி குழந்தை நல டாக்டர் பிரசாத் என்பவரிடம் திண்டிவனம் தனியார் மருத்துவமனையின் டாக்டர் சுரேஷ் மூலமாக அவரது டிரைவர் சிவக்குமார் போலியான மருந்து வாங்கி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திண்டிவனம் சரக மருந்து ஆய்வாளர் சுகன்யா, திண்டிவனம் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் டாக்டர் சுரேஷ் மீது பிரிவு 465 (போலி ஆவண குற்றம்), பிரிவு 468 (மோசடி செய்ய போலி ஆவணம் தயாரித்தல்), பிரிவு 275 (கலப்பட மருந்தை விற்றல்), பிரிவு 328 (நச்சுதன்மை வாய்ந்த பொருளால் ஒருவருக்கு தீங்கு விளைவித்தல்), பிரிவு 420 (மோசடி செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com