திருப்பூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கார் தீவைத்து எரிப்பு

திருப்பூர் அருகே இன்று அதிகாலை ரியல் எஸ்டேட் அதிபர் காரை மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

மூலனூர்:

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள அனுப்பபட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). இவர் சென்னையில் எல்.ஐ.சி.,ஏஜெண்டாகவும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

தற்போது அனுப்பபட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் மனைவி தேவி மற்றும் மகனுடன் வசித்து வந்தார். நேற்றிரவு வீட்டின் கதவை பூட்டி விட்டு 3 பேரும் தூங்கினர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பு சத்தம் கேட்கவே, ரவிச்சந்திரன் வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

இது குறித்து மூலனூர் போலீசில் ரவிச்சந்திரன் புகார் செய்தார். தாராபுரம் டி.எஸ்.பி., ஜெயராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

முன்விரோதம் காரணமாக மர்மநபர்கள் காருக்கு தீவைத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com