

முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரத்தில் கடைதெரு உள்ளது. இந்த கடைத்தெருவில் குளம் மற்றும் வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான உரக்கடைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள உரம் மூட்டைகள் நாசமானது.
அதேபோல் அப்பகுதியில் உள்ள சில கடைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றில் மழைநீர் புகுந்தது. இதையடுத்து உரக்கடையில் தேங்கி உள்ள மழைநீர் டீசல் என்ஜின் மூலம் வெளியேற்றும் பணி 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியில் முறையான வடிகால் வசதியை ஊராட்சி நிர்வாகம் செய்து தரவேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.