புத்தூர் சோதனைச்சாவடியில் லாரியில் செம்மரம் வெட்ட சென்ற 25 பேர் கைது

புத்தூர் சோதனைச்சாவடியில் லாரியில் செம்மரம் வெட்ட சென்ற 25 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருமலை:

ஆந்திர மாநிலம் திருப்பதி கடப்பா உள்ளிட்ட சேஷாசலம் வனப்பகுதியில் ஏராளமான விலை உயர்ந்த செம்மரங்கள் வளர்ந்து உள்ளன.

சமூக விரோதிகள் சிலர் செம்மரங்களை வெட்டி கடத்தி வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து சென்று செம்மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுத்துகின்றனர்.

செம்மரம் வெட்டச் சென்ற தமிழக தொழிலாளர்கள் ஆந்திர போலீசாரால் சுடப்பட்டும் ஏரியில் மூழ்கியும் பலர் இறந்துள்ளனர்.

செம்மரம் வெட்டுவதற்கு அண்டை மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திராவுக்கு வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மலைப்பகுதியில் வாழும் மலை கிராம மக்களுக்கு ஆந்திர போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஆனாலும் ஆந்திராவில் செம்மரம் வெட்ட செல்லும் தொழிலாளர்கள் பலர் அடிக்கடி போலீசாரிடம் சிக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டுவதற்காக லாரியில் செல்வதாக திருப்பதி எஸ்.பி. ரமேஷ் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து புத்தூர் சோதனை சாவடியில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். டிரைவர் உட்பட 7 பேர் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியின் பின்பக்கம் சென்று சோதனை செய்தனர். அங்கு 25 பேர் இருந்தனர். அவர்களை போலீசார் கீழே இறக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

அவர்கள் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com