தென்காசியில் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கடையம் அருகே உள்ள வீராசமுத்திரத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டபோது எடுத்த படம்.
தென்காசி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டபோது எடுத்த படம்.
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வீராசமுத்திரம் தெற்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலையில் தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,‘ வீராசமுத்திரம் தெற்கு தெருவில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டி 140 குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு கடந்த 1987-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இவர்களுக்கு அந்த முகவரியில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்று பஞ்சாயத்துக்கு வீட்டு தீர்வை கட்டி குடிநீர் இணைப்பும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள். தற்போது இந்த வீடுகளுக்கு இடமதிப்பீடு இல்லை என கூறப்படுகிறது. இதனால் இவர்கள் தங்களது வாரிசுதாரர்களுக்கு குடும்பங்களில் பாகப்பிரிவினை செய்ய முடியவில்லை. எனவே தங்களுக்கு இடமதிப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அவர்களுடன் வந்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று மாவட்ட கலெக்டர் சமீரனிடம் கொடுத்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com