

தோகைமலை:
கரூர் மாவட்டம், தோகைமலையில் கடந்த 70 ஆண்டுக்கும் மேலாக வெள்ளிக்கிழமைகளில் வாரச்சந்தை மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது.. இந்த வாரச் சந்தையை நம்பி தோகைமலை, வெள்ளப்பட்டி, பாதிரிப்பட்டி, சின்னரெட்டிப்பட்டி, பொருந்தலூர், கழுகூர், வெள்ளப்பட்டி, கல்லடை, கீழவெளியூர் உள்ளிட்ட குக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்க குவிந்து விலை மலிவான காய்கறிகளை வாங்கி செல்வார்கள். 250-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இந்த வாரச் சந்தையை நம்பி வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த வாரச்சந்தை எப்போதும் சேரும் சகதியுமாக இருந்து வந்தது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர், பொது மக்களின் சார்பாகவும் பல கட்டப் போராட்டங்கள் நடத்தி ஓராண்டுக்கு முன்பாக ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 50 கடைகள், சாக்கடை போன்றவை வாரச்சந்தையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு போக்குவரத்து அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தநிலையில் தோகைமலை வாரச்சந்தை நேற்று வழக்கம்போல் தொடங்கியது. தோகைமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாரச்சந்தை சேரும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வியாபாரம் சற்று குறைவாகவே காணப்படுகிறது என வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.
இதனால் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களும் நடக்க கூட வழியில்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சந்தையின் உள்ளே பொதுமக்கள் நடப்பதற்கும், மழை காலங்களில் சேரும், சகதியும் இல்லாமல் இருப்பதற்கும் சாலை வசதி அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.