

கோவை:
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியர் அந்த கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு வாட்ஸ்- அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார். சில நிமிடங்களில் ஆபாச புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். அதில் பனியன் மட்டுமே அணிந்து கொண்டு அரை நிர்வாண நிலையில் முகம் சுழிக்கும் வகையில் பேராசிரியர் காட்சியளித்துள்ளார். இதனால் மாணவி அதிர்ச்சியானார்.
உடனடியாக அந்த ஆபாச தகவல் மற்றும் புகைப்படத்தை தன்னுடன் படிக்கும் சக மாணவ, மாணவிகளுக்கு அனுப்பி பேராசிரியரின் லீலைகள் குறித்து விளக்கமாக கூறியுள்ளார். இதனால் அனைத்து மாணவிகளும் ஒன்று சேர்ந்து அவர் மீது கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட முடிவு செய்தனர். இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் மாணவர்களும் வந்தனர்.
அதன்படி சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரியில் படிக்கும் சக மாணவ, மாணவிகள், முன்னாள் மாணவர்கள் என அனைவருடன் சேர்ந்து கல்லூரிக்கு சென்று கல்லூரி செயலரை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அதில் பேராசிரியர் ஆபாச மெசேஜ் மற்றும் படங்களை அனுப்பி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் தனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
கல்லூரி செயலர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் பேராசிரியர் மாணவிக்கு ஆபாச மெசேஜ் மற்றும் படங்கள் அனுப்பியது உறுதியாகவே பேராசிரியரை கல்லூரி நிர்வாகம், சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் தவறு செய்த ஆசிரியரை நிரந்தரமாக பணி நீக்க செய்ய கோரி கல்லூரி மாணவ, மாணவிகள், முன்னாள் மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இன்று கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்கள், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தவறு செய்வது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே பலமுறை இது போன்ற தவறுகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அப்போது யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. தற்போது மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புகார் கொடுத்துள்ளோம். எனவே அவரை சஸ்பெண்டு மட்டும் செய்தால் போதாது. நிரந்தரமாக பணி நீக்கம் செய்வதுடன், அவரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கல்லூரி சார்பில் இதுகுறித்து விசாரணை நடத்த தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.