பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் கைதி தற்கொலை

வேலூர் ஜெயிலில் இருந்து பரோலில் சென்று தலைமறைவான கைதி தற்கொலை செய்த சம்பவம் ஜெயில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை
தற்கொலை
Published on

வேலூர்:

வேலூர் விருப்பாட்சிபுரம் வாணியகுளத்தை சேர்ந்தவர் வேலு என்கிற வேல்முருகன் (வயது 28). இவர் கடந்த 2012 -ம் ஆண்டு ஓட்டேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதில் ஆயுள் தண்டனை பெற்ற வேல்முருகன் புதுக்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் 2017-ம் ஆண்டு வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி பரோல் கேட்டு விண்ணப்பித்தார். அவருக்கு 4 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 15-ந்தேதி ஜெயிலிலிருந்து பரோலில் சென்றார். நேற்று முன்தினம் காலை அவர் மீண்டும் ஜெயிலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து வேலூர் ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆயுள் கைதி வேல்முருகனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வேல்முருகன் இன்று காலை அவரது வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்த பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற வேல்முருகன் 8 ஆண்டுகளாக ஜெயிலில் இருந்தார். பரோலில் வந்த அவர் மீண்டும் ஜெயிலுக்கு செல்ல வேண்டுமே என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

பரோலில் சென்று தலைமறைவான கைதி தற்கொலை செய்த சம்பவம் ஜெயில் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com