

கடலூர்:
கள்ளக்குறிச்சி அருகே வேங்கைவாடி சேர்ந்தவர் குருசாமி (வயது 47). இவர் கொலை வழக்கில் தற்போது கடலூர் மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்.
நேற்று இரவு திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பிளேடை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து அவர் பிளேடு முழுங்கியதை அங்கு இருந்தவர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குருசாமி மீட்டு சிகிச்சைக்காக தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து குருசாமி எதற்காக பிளேடை விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்திய போது, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைதி குருசாமியின் தந்தை இறந்து உள்ளார்.
இந்த தகவல் சரியான முறையில் குருசாமிக்கு தெரியாததாலும், தனது தந்தை இறப்பிற்கு செல்லமுடியாமல் இருந்ததாலும் மனமுடைந்த நிலையில் பிளேடு விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. ஆனால் இது மட்டும் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சிறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது மட்டுமின்றி குருசாமிக்கு எப்படி பிளேடு கிடைத்தது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.