பாளை ஜெயிலில் கைதி கொலை: உடலை வாங்க மறுத்து 7-வது நாளாக போராட்டம்

நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 கைதிகள் மீது கொலை வழக்கு உள்பட 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நெல்லை:

பாளை அருகே உள்ள மூன்றடைப்பு வாகைக் குளத்தை சேர்ந்தவர் முத்து மனோ (வயது27). இவர் விசாரணை கைதியாக பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 22-ந்தேதி கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் முத்து மனோ அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 கைதிகள் மீது கொலை வழக்கு உள்பட 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேற்று சி.பி.சி.ஐ.டி. பிரிவு டி.எஸ்.பி. அனில்குமார், இன்ஸ்பெக்டர் பிரைசந்திரன் மற்றும் போலீசார் பாளை மத்திய சிறைக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

7 கைதிகளிடமும் விசாரணை நடத்துவது தொடர்பாக சிறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

மேலும் கொரோனா தொற்று காலம் என்பதால் கைதிகள் 7 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதா அல்லது சிறைக்கு நேரில் சென்று அங்கு விசாரணை நடத்துவதா என்றும் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் முத்து மனோவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 7-வது நாளாக மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளத்தில் தங்கி இருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் உடலை ஒப்படைப்பது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com