கொரோனா தொற்று உறுதியான நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிய கைதி

போலீஸ் நிலையத்தில் இருந்து கைதி தப்பியது தொடர்பாக பணியில் கவனக்குறைவாக இருந்த எஸ்.ஐ.யை ஆயுதப்படைக்கு மாற்றி கமி‌ஷனர் உத்தரவிட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அண்டை மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து கூடுதல் விலைக்கு சிலர் விற்று வருகிறார்கள். அவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக கருப்பூரில் டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்த கருப்பூர் பகுதி அ.தி.மு.க. செயலாளர் தங்கவேல் (53) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கருப்பூர் போலீஸ் நிலையத்தில் இருந்த அவர் தப்பியோடி விட்டார்.

அவருக்கு முன்னதாக பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது. இதனால் அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர். அவரை பல்வேறு இடஙகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்த எஸ்.ஐ.சத்தியமூர்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றி கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் அவரை கைது செய்யும் பணியும் எஸ்.ஐ. சத்தியமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். தப்பியோடிய தங்கவேல் 4 நாட்களாக தலைமறைவாக உள்ளதால், அவரால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனிடையே நேற்று போலீசார் தங்கவேலின் உறவினர் கனகராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரை விடுவிக்க கோரி கனகராஜின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரை விடுவித்தனர்.

இதற்கிடையே இரும்பாலை பகுதியில் 2 ஆயிரம் மதுபாட்டில்களை தங்கவேலிடம் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்த போலீசார் முக்கிய பிரமுகர்கள் நெருக்கடியால் மீண்டும் அதனை அவரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கமி‌ஷனர் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com