சேலத்தில் அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து கைதி தற்கொலை

சேலத்தில் அரசு ஆஸ்பத்திரி 2-வது மாடியில் இருந்து கீழே குதித்து கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

சேலம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் முத்துவேல் (வயது 29). திருமணம் ஆகவில்லை.

இவர் கடந்த ஆண்டு சொத்து தகராறில் தனது தாயை கொலை செய்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய நாகரசம்பட்டி போலீசார் முத்துவேலை கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சேலம் மத்திய சிறையில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் காயம் ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு 2-வது மாடியில் கைதிகளுக்கான அறையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை கழிவறைக்கு அழைத்து சென்றனர். அப்போது திடீரென 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற அரசு ஆஸ்பத்திரி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சேலத்திற்கு வந்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com