மின் தடையை கண்டித்து குரும்பாபேட்டில் பொதுமக்கள் சாலை மறியல்

மின் தடையை கண்டித்து குரும்பாபேட்டில் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மறியல்
மறியல்
Published on

வில்லியனூர்:

புதுவை மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை திரும்ப பெறக்கோரி மின்துறை ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் தொடர் மழையால் ஏற்பட்ட மின் தடைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் ஊசுடு தொகுதி குரும்பாபேட் ராகவேந்திரா நகர் உள்ளிட்ட பகுதியில் கடந்த 3 நாட்களாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி மின்துறைக்குக்கு புகார் தெரிவித்தும், மின்தடையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரி - மேட்டுப்பாளையம் சாலையில் திடீரென்று அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மின் தடையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com