வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்கு சீட்டு வழங்கப்பட்டது - கலெக்டர் கண்ணன் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் வாக்கு சாவடி பணியாளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு தபால் வாக்குப் பதிவு சேவைமையம் அமைக்கப்பட்டதாக கலெக்டர்கண்ணன் தெரிவித்தார் .
கலெக்டர் கண்ணன்
கலெக்டர் கண்ணன்
Published on

விருதுநகர்:

மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்றும் 11,376 வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 7 மையங்களில் நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்த பின் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-

நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு மாவட்டத்திற்குட்பட்ட 7 தொகுதிகளில் மொத்தம் 2,370 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட கூடிய 11 ஆயிரத்து 376 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குசாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு பொதுபார்வையாளர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

வாக்குச்சாவடி பணியில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டாம் நிலை பயிற்சியில் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்களை பயன்படுத்தும் வாக்குப்பதிவு படிவங்களை பூர்த்தி செய்தல் மற்றும் அமைதியான வாக்குப்பதிவினை நடத்துவதற்கு தேவையான அனைத்து வழிமுறைகள் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.

முதற்கட்ட பயிற்சியின்போது அவர்கள் அனைவருக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான 12 டி படிவம் வழங்கப்பட்டது.

நேற்று 2-ம் கட்ட பயிற்சி வகுப்பில் அனைவருக்கும் தபால் வாக்கு சீட்டு வழங்கப்பட்டது. மேலும் தபால் வாக்குகளில் பதிவு செய்து உரிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க ஏதுவாக தபால் வாக்குப் பதிவு சேவை மையம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் வாக்குசாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் வாக்குப்பதிவு செய்வது குறித்து செயல்விளக்கம் அளித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் கண்ணன் கூறினார்.

இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், ராஜபாளையம் கல்யாண்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் முருகன், விருதுநகர் சந்தான லட்சுமி, சாத்தூர் புஷ்பா, அருப்புக்கோட்டை முருகேசன், திருச்சுழி கணேசன் மற்றும் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com