விவசாயிகளுக்கு பாக்கித்தொகை வழங்காவிட்டால் போராட்டம் - பொன்முடி எம்.எல்.ஏ. தகவல்

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித்தொகையை வழங்கவில்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொன்முடி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்த விற்பனைக்கூடத்தில் திருக்கோவிலூர் 

மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்து செல்கின்றனர். விளைபொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் சிலர் விவசாயிகளுக்கு உரிய பணத்தை வழங்காமல் காலம்  தாழ்த்தி வருகின்றனர். இதை கண்டித்து வியாபாரிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட விற்பனைக்கூட செயலாளர் ஜெயக்குமார் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி தீர்வுகாண கண்காணிப்பு அதிகாரியான கேப்டன் வலன் என்பவரை நியமனம் செய்தனர்.

இதையடுத்து அந்த அதிகாரி நடத்திய விசாரணையில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்த தானியங்களுக்கு பெரும்பாலான வியாபாரிகள் பணம் செலுத்தி இருந்த போதும், அதனை விற்பனை கூட நிர்வாகம் மோசடி செய்து பணம் கட்டாத வியாபாரிகள் கணக்கில் வரவு வைத்ததும், தெரியவந்தது.

மேலும் செஸ் இல்லாமல் வியாபாரிகள் வந்து தானியங்களை கொள்முதல் செய்ததும் தெரியவந்தது. இது தவிர எடைமோசடி நடந்துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது வரை விவசாயிகளுக்கு வியாபாரிகள் ரூ.80 லட்சம் பாக்கி வைத்துள்ளது தெரியவந்தது. மேலும் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு சில வியாபாரிகளின் தவறான நடவடிக்கைக்கு விற்பனை கூட நிர்வாகம் துணை போவதாக கூறி அதனை கண்டித்து வியாபாரிகள் சங்கம் கடந்த 2 வாரங்களாக விளைபொருட்களை கொள்முதல் செய்யாமல் புறக்கணித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்யமுடியாமல் பெரும் அவதி அடைந்த வருகின்றனர். 

இந்த பிரச்சினையை தீர்க்க தவறு செய்த வியாபாரிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் விற்பனைக்கூட அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இந்த நிலையில் பொன்முடி எம்.எல்.ஏ. ஒழுங்குமுறைவிற்பனைக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித்தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவில்லையெனில் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்று வரும் மோசடியை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் வாசிம்ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com