

பூந்தமல்லி:
தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து இங்கு தங்கி இருந்து பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.
அதேநேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல பணம் இன்றி பலர் இங்கேயே தவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் சென்னை குன்றத்தூரில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 30 பேர் தே.மு.தி.க. பிரமுகரான சுரேஷ்ராஜ் வீட்டில் தங்கி இருந்து வருகிறார்கள்.
ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் தனது சகோதரர் பிரதாப் சாகு என்பவருடன் வடமாநில வாலிபர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்கள் அனைவரும் அந்த நிறுவனத்தின் மூலமே பல்வேறு இடங்களில் பணி வாய்ப்பு பெற்று வேலை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இந்த தொழிலாளர்களுக்கு உரிய முறையில் சம்பளம் வழங்கப்படாததால் அவர்களால் தாங்கள் தங்கி இருந்த வீட்டுக்கு வாடகை பாக்கி கொடுக்க முடியவில்லை.
கடந்த 3 மாதங்களாக ரூ.2 லட்சம் அளவுக்கு அவர்கள் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் வேலை எதுவும் இல்லாமல் இருந்த வடமாநில தொழிலாளர்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டனர். இதனை அறிந்த வீட்டின் உரிமையாளரான தே.மு.தி.க. பிரமுகரான சுரேஷ்ராஜ் இதுபற்றி அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர் வடமாநில தொழிலாளர்களை சரமாரியாக தாக்கி உள்ளார்.
பிளாஸ்டிக் பைப்பால் வடமாநில வாலிபர்களை கொடூரமாக சுரேஷ்ராஜ் தாக்கி காலால் எட்டி உதைத்துள்ளார். இதனை அங்கிருந்த வடமாநில வாலிபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
தாக்குதலில் ஈடுபடும் போது தே.மு.தி.க. பிரமுகர் சுரேஷ் ராஜ் நாளைக்குள் பணத்தை தர வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று கூறுகிறார். இதுவும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
தாக்குதலில் காயம் அடைந்த வாலிபர்களில் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்களும் உள்ளனர். இந்த வீடியோ வாட்ஸ்-அப், மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக ஒடிசா வரை சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒடிசா அரசு, தமிழக அரசிடம் முறைப்படி தெரிவித்தது.
தாக்குதலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஒடிசா மாநில அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதன் பேரில் குன்றத்தூர் போலீசார் தே.மு.தி.க. பிரமுகர் சுரேஷ்ராஜ் மீது தாக்குதலில் ஈடுபடுதல், அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யபட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கைதான சுரேஷ் ராஜ் காஞ்சிபுரம் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளராக உள்ளார். அப்பகுதியில் பிரபலமான இவர் வடமாநில வாலிபர்களை தாக்கிய சம்பவமும், அதுதொடர்பான வீடியோ வெளியானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.