

சேலம்:
சேலம் மத்திய சிறையில் செல்போன், கஞ்சா புழக்கம் இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து இன்று காலை அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50 போலீசார், வார்டன்கள் மத்திய சிறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 7 மணி வரை நடந்தது. சேலம் மத்திய சிறையை பொறுத்தவரை சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பலமுறை சேலம் மத்திய சிறையில் செல்போன், கஞ்சா பொட்டலங்கள் கைதிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தடுப்பதற்காக இன்று சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சுமார் 2 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த சோதனையில் எந்தவித பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.