அரிவாள்-ஆயுதங்கள் வாங்க ஆதார் கட்டாயம்: போலீசார் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ரவுடிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆதார் அட்டை
ஆதார் அட்டை
Published on

மதுரை:

தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மதுரையில் 6 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி ரவுடிகள் பயன்படுத்தும் அரிவாள், கத்தி மற்றும் ஆயுதங்கள் தயார் செய்யும் இரும்பு பட்டறைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. மேலும் ஆயுதங்கள் வாங்குபவர்கள் விவரங்களை பட்டறை உரிமையாளர்கள் சேகரித்து வைக்க வேண்டும். அதனை சம்பந்தப்பட்ட போலீசார் உரிய விசாரணை நடத்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி மதுரை நகர் மற்றும் மாவட்டத்தில் ரவுடிகள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மதுரை நகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் முக்கிய வழக்குகளில் தொடர்புடைய 275 ரவுடிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து மதுரை நகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள இரும்பு பட்டறைகள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு போலீசார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அங்கு ஆயுதம் வாங்க வருவோரின் முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் என்ன காரணத்திற்காக ஆயுதங்களை வாங்குகிறார்கள் என்ற விவரம் போன்றவற்றை சேகரிக்க வேண்டும்.

மேலும் அரிவாள் மற்றும் ஆயுதங்களை வாங்க வருவோர் ஆதார் விவரங்களை பட்டறை உரிமையாளர்கள் கட்டாயம் வாங்கி வைத்திருக்க வேண் டும்.

அனைத்து பட்டறைகளிலும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி அந்த பதிவுகளை சேமித்து வைக்கவேண்டும்.

ஆயுதங்கள் வாங்க வருபவர்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடி யாக அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மதுரை நகர் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆட்டோவில் ஆயுதங்களுடன் சந்தேகப்படும் படியான நபர்கள் பயணம் செய்யும் பட்சத்தில் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், சமூக விரோத செயல்களுக்கு ஆட்டோவை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து ரவுடிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதுரை நகரில் நெல் பேட்டை, ஒத்தக்கடை, வில்லாபுரம், தமிழ்சங்கம் ரோடு ஞாயிறு சந்தை ஆகிய பகுதிகளில் கத்தி, அரிவாள் போன்றவைகளை விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ளன. மேலும் இங்கு புகழ்பெற்ற சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் தயாரிக்கப்படும் அரிவாள்களும் விற்கப்படுகிறது.

இதனை வாங்க வருபவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு நகர் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com