

நாகர்கோவில்:
நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 27). இவர் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏராளமான பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். அதனை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இதுதொடர்பாக நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையத்தில் காசி மீது கந்து வட்டி வழக்கு மற்றும் போக்சோ, பாலியல் என மொத்தம் 7 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பெண்களை மிரட்டி பணம் பரித்த வழக்கில் காசி, அவருடைய நண்பர்கள் தினேஷ், டேசன் ஜினோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கந்து வட்டி வழக்கில் காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டார். இதில் தினேஷ் ஜாமீனில் வெளியே வந்தார்.
நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட காசி, அவரது தந்தை தங்கபாண்டியன், நண்பர் டேசன் ஜினோ ஆகியோர் சமீபத்தில் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையில் பெண்களை மிரட்டிய வழக்கில் காசியின் நண்பர் நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வாலிபர் தற்போது வெளிநாட்டில் உள்ளதால், அவரை இந்தியா வரவழைத்து விசாரணையை துரிதப்படுத்த உள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக போலீசார் கன்னங்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வெளிநாட்டில் உள்ள அந்த வாலிபரை உடனடியாக வரவழைத்து போலீசில் ஆஜராக வேண்டும் என கூறினர். இல்லாவிட்டால் வாலிபரின் பாஸ்போர்ட்டை முடக்கி இன்டர்போல் உதவியுடன் அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஒரு மாதம் அவகாசம் கேட்டதாக தெரிகிறது. ஒரு மாதத்திற்குள் அவரை இந்தியா வரவழைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜர் படுத்துவதாக கூறினர். அதற்கு போலீசார் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிலையில் வெளிநாட்டிலுள்ள வாலிபரை கைது செய்தால், பெண்களை மிரட்டிய வழக்கில் ஏற்கனவே கைதாகி உள்ள காசி, அவரது 2 நண்பர்கள் என மொத்தம் 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணி வேகமெடுக்கும் என போலீசார் கூறினர்.