சங்கரன்கோவில் அருகே வியாபாரி மோட்டார் சைக்கிளை திருடிய போலீஸ்காரர் கைது

சங்கரன்கோவில் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த வியாபாரி மோட்டார் சைக்கிளை திருடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

சங்கரன்கோவில்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அங்கு பணியாற்றும் பெண் போலீஸ் கிரேசியா என்பவர் துணையுடன் அவரது கணவர் அன்புமணி திருடியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் தென்காசி மாவட்டத்தில் நடந்துள்ளது.

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியகோவிலான் குளத்தை சேர்ந்தவர் நம்பிராஜன். இவர் நடுவக்குறிச்சியில் சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார்.

வழக்கமாக தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு தூங்க சென்ற அவர் நேற்று காலை பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த நம்பிராஜன் சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அதே பகுதி சில்லிகுளத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 31) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. அதனை அவர் குருக்கல்பட்டிக்கு கொண்டு சென்று விற்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமச்சந்திரனை இன்று கைது செய்தனர். கைதான ராமச்சந்திரன் மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கனவே சங்கரன்கோவில் பஸ்நிலைய பகுதியில் சீருடை அணியாமல் நின்ற போது ஒரு பெண்ணிடம் குடி போதையில் அத்துமீறியதும், அதனை தட்டிக்கேட்ட அவரது கணவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

இந்நிலையில் அவர் தற்போது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com