தூத்துக்குடி தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய 4 பேர் கைது

தூத்துக்குடி தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
கைது
கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி போல்டன் புரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு காட்சிக்கு 5 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சினிமா டிக்கெட் வைத்திருந்தனர்.

ஆனால் அவர்கள் மது குடித்திருந்ததால் தியேட்டருக்குள் செல்ல ஊழியர்கள் அனுமதிக்காமல் அவர்களிடம் டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பி கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மீண்டும் தியேட்டருக்கு வந்தனர். அப்போது அவர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை தியேட்டருக்குள் வீசினர். அது வளாகத்திற்கு விழுந்து வெடித்து சிதறியது. பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தியேட்டரில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கொண்டும் ஆய்வு நடத்தினர்.

அதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி ராஜீவ் நகர் 1-வது தெருவை சேர்ந்த மைக்கேல் அந்தோணி அரவிந்த் (வயது20), அந்தோணிராஜ் (20), மருதநாயகம் (19) மற்றும் திருச்சி மாவட்டம் லால்குடி கீழ மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் சுகுமார் மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ராஜபாண்டி என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து ராஜபாண்டியை தவிர மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். ராஜபாண்டியை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com